26 January 2019


பிப்ரவரி’18 முதல் 3நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்
அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு

அனைத்து சங்க கூட்டமைப்பின் கூட்டம் நேற்று 25.01.2019 அன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள NFTE சங்க அலுவலகத்தில் கூடியது. கூட்டமைப்பின் தலைவர் தோழர் சந்தேஸ்வர் சிங் கூட்டத்திற்கு தலைமைதாங்கினார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் P.அபிமன்யு கூட்டத்தில் பங்கேற்றவர்களை வரவேற்று விவாதக் குறிப்புகளை முன்வைத்தார்.

நேற்றைய கூட்டத்தில் BSNLEU சங்கத்தின் சார்பாக அதன்பொதுச்செயலரும் , கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர்  P.அபிமன்யு அவர்களும் NFTE சங்கத்தின் சார்பாக அதன் பொதுச்செயலரும், கூட்டமைப்பின் தலைவருமான தோழர் சந்தேஸ்வர்சிங் மற்றும் மத்திய சங்கத்தின் தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்களும் SNEA சங்கத்தின் சார்பாக தோழர் செபஸ்டின், பொதுச்செயலர் மற்றும் அச்சங்கத்தின் தலைவர் தோழர் A.K.கான் அவர்களும் , AIBSNLEA சார்பாக அதன் பொதுச்செயலர் தோழர் பிரகலாத் ராய் மற்றும் அச்சங்கத்தின் தலைவர் தோழர் S.சிவக்குமார் அவர்களும் BSNLMS சங்கத்தின் சார்பாக அதன் பொதுச்செயலர் தோழர் சுரேஷ்குமார் அவர்களும் , BSNLATM சங்கத்தின் சார்பாக அதன் துணைப்பொதுச்செயலர் தோழர் ரேவதி பிரசாத் அவர்களும் மற்றும் BSNLOA சங்கத்தின் சார்பாக அதன் துணைப் பொதுச்செயலர் தோழர் H.P.சிங் அவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டம் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நிறைவேற்றத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தது. கூட்டத்தில் 3வது ஊதிய மாற்றப் பிரச்சினையில் முன்னேற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதை குறிப்பிட்டுக் காட்டியது. 4G அலைக்கற்றை ஒதுக்கீடு விசயத்திலும் நிதி ஆயோக் மற்றும் செலவினத்துறை ஆகியவை தடை ஏற்படுத்தவே முற்படுகிறது. ஓய்வூதிய மாற்றப் பிரச்சினை ஊதிய மாற்ற விவகாரத்தோடு இணைக்கப்படாமல் தனியாக விவாதிக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்த பின்பும் ஓய்வூதிய மாற்ற விவகாரத்தில் DOT தடை ஏற்படுத்தவே முற்படுகிறது.

கூட்டம் BSNL சந்தித்து வரும் நெருக்கடியான நிதிச் சுமையோடு போராடி வருவதையும் கவலையோடு பரிசிலீத்தது. DOT ஏற்படுத்தியுள்ள தடையால் BSNL நிறுவனத்தால் வங்கிக் கடன் பெறமுடியவில்லை. இதனால் மாநில நிர்வாகங்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணம் , வாடகை , ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளம்  ஆகியவற்றிற்கான நிதியை வழங்கமுடியவில்லை. நிறுவனத்தின் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கப் பணிகள் தாமதமாவதால் நிறுவனத்தின் வளர்ச்சி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட GPF , EPF , சொசைசிட்டி மற்றும் வங்கித் தவணைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் முகமைகளுக்கு செலுத்தபடாததால் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


BSNL புத்தாக்கத்திற்கான அனைத்து வழிகளையும் மூடுவதற்கான வேலைகளை DOT முன்னின்று செய்கிறது. தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் அரசிடமிருந்து BSNLக்கு உதவிகள் கிடைப்பதாக தெரியவில்லை. BSNL நிறுவனம் தனது வசம் உள்ள காலியாகவுள்ள நிலங்களை லாபகரமாக பயன்படுத்தவும், குத்தகைக்கு விடவும் நில மேலாண்மைக் கொள்கையை DOT நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு வைத்துள்ளது. இக்கொள்கைக்கு அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் தனது காலியாகவுள்ள நிலங்களை குத்தகைக்கு விட்டு BSNL நிறுவனத்தால் வருடத்திற்கு ரூ.7000/- கோடி முதல் ரூ.10,000/- கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும். ஆனால் DOT நிர்வாகம் இதற்கும் முட்டுக்கட்டையாக வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.

BSNL நிர்வாகம் தனது வசம் உள்ள செல் கோபுரங்களின் பராமரிப்பை அதிகப்படியான கட்டணத்தில் தனியார் வசம் விட்டுள்ளது. இதற்காக BSNL நிர்வாகம் அதிகப்படியான கட்டணத்தை வருடந்தோறும் செலுத்த வேண்டியுள்ளது. ஆரம்பம் முதலே இதனை அனைத்து சங்க கூட்டமைப்பு எதிர்த்து வந்தது. ஆனால் நிர்வாகம் இதனைக் கணக்கில் கொள்ளாமல் முன்னேறிச் சென்றது. செல் கோபுரங்களின் பராமரிப்பை நாடு முழுவதுமுள்ள அதன் ஊழியர்கள் திறன்பட செய்து வரும் சூழ்நிலையில் நிறுவனம் சந்திக்கும் கடுமையான நிதி நெருக்கடியான காலகட்டத்தில் இத்தகைய கூடுதலான செலவு தேவையற்றது.

மேற்கண்ட வகையில் பிரச்சினைகளை ஆழ்ந்து விவாதித்த கூட்டம் போராட்டத்தை மீண்டும் துவக்கும் வகையில் கூட்டமைப்பு போராட்டத் திட்டங்களை முன்னெடுக்க ஒருமனதாக முடிவெடுத்தது. ஒரு சில புதிய கோரிக்கைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அவை BSNL நிறுவனத்தின் புத்தாக்கத்திற்கு பேருதவி புரியும்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

1.   கள நிலைமைகளின் அடிப்படையில் , கூட்டமைப்பு 18.02.2019 முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு ஊழியர்களையும் , அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறது.

2.   11.02.2019 முதல் 5 நாட்களுக்கு தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்தி நமது கோரிக்கைகள் மீது பொதுமக்களின் ஆதரவை திரட்டுவது.

3.   12.02.1019 மற்றும் 13.02.2019 ஆகிய நாட்களில் மாவட்ட மற்றும் மாநில மையங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துவது.

4.   அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து நமது கோரிக்கைகளின் குறிப்பாக BSNL நிறுவனத்தின் புத்தாக்கத்திற்கு   அவர்களின் ஆதரவைக் கோருவது.

நமது போராட்டத்திற்கான கோரிக்கைகள்

1.       15% நிர்ணயத்துடன் 3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துக.

2. BSNL சமர்ப்பித்த வரைவறிக்கையின்படி BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்குக.

3. BSNL ஓய்வூதியர்களுக்கு 01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் வழங்கிடுக.

4. BSNL வழங்கும் ஓய்வூதியப் பங்களிப்பின் மீது அரசு விதிகளை அமுலாக்கு.

5.         2வது ஊதியக்குழுவில் விடுபட்ட பிரச்சினைகளை தீர்த்திடுக.

6.   BSNL நிறுவனம் முன்வைத்துள்ள நில மேலாண்மைக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கிடு.

7. BSNL நிறுவனம் துவக்கப்பட்ட போது அமைச்சரவை அளித்த உறுதிமொழிகளின் அடிப்படையில் நிலங்களை BSNL பெயருக்கு மாற்றம் செய்ய தேவையான நடவடிக்கைகளை துரிதகதியில் துவக்குக.

8.   BSNL நிறுவனத்தின் நிதியாயாதரத்தை காக்கும் வகையில் BSNL நிறுவனம் துவக்கப்பட்ட போது அமைச்சரவை அளித்த உறுதிமொழிகளின் அடிப்படையில் BSNLன் ஸ்திரத்தன்மையை காக்கும் பொருட்டு பொருளாதார உதவியை வழங்கிடு. BSNL நிறுவனம் வங்கிக் கடன் பெற உத்தரவாதக் கடிதம் வழங்கிடு.

9.   BSNL நிறுவனத்தின் செல்கோபுரங்கள் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக.


தோழர்களே! தயார் படுவீர்..
போராடுவோம்.. BSNLஐ காத்திடுவோம்...
போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.