13 February 2019

வேலைநிறுத்தம் நடந்தே தீரும் - அனைத்து சங்க கூட்டமைப்பு உறுதி..

12.02.2019 அன்று மாலை 05.30 மணிக்கு AUAB மற்றும் BSNL நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையேயான சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாகத்தின் சார்பில் திரு அனுபம் ஸ்ரீவாஸ்தவா CMD BSNL, திருமிகு சுஜாதா T ரே DIRECTOR( HR & Fin) மற்றும் திரு A.M.குப்தா GM(SR) ஆகியோரும், AUAB சார்பாக தோழர் P.அபிமன்யு அமைப்பாளர், தோழர் சந்தேஸ்வர் சிங் தலைவர், தோழர் K.செபாஸ்டியன் GS SNEA, தோழர் பிரகலாத் ராய் GS AIBSNLEA, தோழர் பதக் AGS AIGETOA, தோழர் சுரேஷ் குமார் GS BSNLMS, தோழர் H.P.சிங் Dy.GS BSNLOA மற்றும் தோழர் S.சிவகுமார் தலைவர் AIBSNLEA ஆகியோரும் பங்கேற்றனர். 

BSNL சந்திக்கும் கடும் நிதி நெருக்கடியை விவரித்த CMD BSNL, 2019 பிப்ரவரி மாத ஊதியத்தை ஒத்தி வைப்பதற்கு AUABயின் ஒத்துழைப்பை கோரினார். AUAB தலைவர்கள் BSNL CMDயின் இந்த வேண்டுகோளை உறுதியுடன் மறுத்து விட்டனர். ஊழியர்களின் ஊதியம் பட்டுவாடா செய்யப்படுவதை ஒத்தி வைக்கக் கூடாது என்பதை ஒற்றைக் குரலில் உறுதியுடன் தெரிவித்தனர். 

அதற்கு பின்னர் 18.02.2019 முதல் AUAB விடுத்துள்ள 3 நாட்கள் வேலை நிறுத்தம் என்பது நம்மை நாமே தோற்கடிக்கக் கூடிய விஷயம் என்று கூறி, வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார். 

BSNL CMD யின் இந்த வேண்டுகோளை நிராகரித்த AUAB தலைவர்கள், என்ன விலை கொடுத்தாலும் வேலை நிறுத்தம் நடைபெறும் என உறுதியுடன் தெரிவித்தனர். மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரும்ப திரும்ப கொடுத்த வாக்குறுதிகளை DoT அமலாக்கவில்லை என்று அவர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். DoTக்கு போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக AUAB தலைவர்கள், BSNL CMDயிடம் தெரிவித்ததோடு, வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெறும் என்றும் தெரிவித்தனர். 

வேலை நிறுத்தத்தில் செல்வது என்கிற முடிவிலிருந்து திரும்ப செல்வது என்ற கேள்விக்கே இடம் இல்லை என நிர்வாகத்திடம் உறுதியான வார்த்தைகளில் AUAB தெரிவித்துள்ளது.

*3நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் தோழர்களே*