NFTEன்
வெற்றிக்கு கட்டியம் கூறிய
தேர்தல் பிரச்சாரத் துவக்க விழா
எட்டாவது சரிபார்ப்புத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரக்கூட்டம் மற்றும் சேவைக்கருத்தரங்கம் விருதுநகர் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று 29.08.2019 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் M.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டப் பொறுப்புச் செயலர் தோழர் P.சம்பத்குமார் தனது வரவேற்புரையில் BSNL ஊழியர் சங்கத்தின் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாக கூறினார். மாவட்டச் செயலர் தோழர் N.ராம்சேகர் தனது துவக்கவுரையில் அடிமட்ட ஊழியனாக பணியில் சேர்ந்தோம் நமது இன்றைய வளமான வாழ்க்கை நமது NFTE சங்கம் அருளிய வரம் எனக் குறிப்பிட்டார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட சேவா மாநிலத்துணைச் செயலர் தோழர் R.பிரேம்குமார் தனது வாழ்த்துரையில் NFTE சங்கம் முதன்மைச்சங்கமாவது காலத்தின் கட்டாயம் என்றும் அதற்கு தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்குவதாகவும் தோழர் பட்டாபி கலந்து கொண்டுள்ளார். NFTE சங்கத்திற்கு பட்டாபிசேகம் சூட்டும் நாளை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறினார்.
சேவா
மாவட்டச் செயலர் தோழர் பெரியசாமி தனது உரையில் NFTE சங்கம் வெற்றி பெறுவது காலத்தின்
தேவை. தொழிலாளியின், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இனி எப்போதும் இணைந்தே பயணிப்போம்
என்றார்.
முன்னாள்
மாவட்டச் செயலர் தோழர் S.P.மதிவாணன் தனது வாழ்த்துரையில் நமக்கு, நமது நிறுவனத்திற்கு
சில அபாயக்குறிகள் தெரிகின்றன. அதைக் கண்டு பயப்படாமல் அதனை எப்படி எதிர்கொள்வது என்று
சிந்தித்து ஊழியர்களின் கலக்கத்தை போக்குவது நமது கடமை. அதை நமது NFTE சங்கம் சரியாகச்
செய்கிறது எனவும், நமது NFTE சங்கத்தை முதன்மைச் சங்கமாக வெற்றியடையச் செய்வதில் நாம்
அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
ஓய்வூதியர்
சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர் N.சண்முகம் தனது உரையில் நாம் இன்று நிறைவான ஓய்வூதியம்
அதுவும் அரசின் தொகுப்பு நிதியிலிருந்து பெறுகிறோம் என்றால் அதற்கு முழுமையான காரணம்
தோழர் குப்தாவும், NFTE சங்கமும் தான் என்றும் தேர்தல் பணிகளில் தங்களது சங்கம் தனது
பங்களிப்பை செலுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
மாநில
உதவிச் செயலர் தோழர் D.ரமேஷ் தனது உரையில் BSNL ஊழியர் சங்கம் கேப்டன் ஜீரோ என்ற பட்டத்துடன்
தேர்தலை சந்திக்கிறது என்றும், அச்சங்கத்தின் போதமைகள் நம்மையும் நமது நிறுவனத்தையும்
பெரிதும் பாதித்துள்ளதாகவும், BSNL Connecting India என்ற கோசம் எப்படி வெற்றுக் கோசமாக
முன்வைக்கப்படவில்லையோ அதே போல வளமான BSNLக்கு வலிமையான NFTE அவசியம் என்பதை காலம் தோழர்களுக்கு உணர்த்தியுள்ளதாகவும்,
நமது NFTE சங்கத்தை முதன்மைச் சங்கமாக வெற்றி பெறவைக்கவேண்டியது நமது அனைவரின் தலையாய
கடமை எனக் குறிப்பிட்டார்.
தோழர்
பட்டாபி தனது சிறப்புரையில் தோழர்களின் மத்தியில் புத்தாக்கம், பணி ஓய்வு வயது குறைப்பு
ஆகியவை குறித்த சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை போக்கும் வகையில் தெளிவான கருத்துக்களை
முன்வைத்தார்.
நமது
BSNL நிறுவனம் தொடர்ந்து இயங்குவதன் அவசியத்தை நமது இலாகா அமைச்சர் பாராளுமன்றத்தில்
எடுத்துரைத்துள்ளார். எனவே நமது நிறுவனம் எப்படி சட்டமுன்வடின் அடிப்படையில் துவக்கப்பட்டதோ
அதே போல் நிறுவனத்தை மூடுவதற்கும் சில சட்ட விதிகள் உள்ளன என்றார்.
இன்று
நமது BSNL நிறுவனம் நட்டத்தை சந்தித்து வருவதற்கு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்
ஒரு பிரதான காரணமாக பத்திரிக்கைகளால் முதன்மைக் காரணமாக தவறாக சித்தரிக்கப்படுகின்றன.
ஆனால் உண்மையில் நமது நிறுவனம் அரசுக்கு கொடுத்துள்ள அறிக்கையில் ஊழியர் சம்பளம் ஒன்பதாவது
காரணமாகத்தான் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
ஓய்வு
வயதை 58 ஆக குறைப்பது என்பது நமக்கு பொருந்தாது எனவும், ஏனெனில் 98ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு
ஓய்வு வயது 58லிருந்து 60வது ஆக உயர்த்தப்பட்டது. பின்பு அது நமக்கும் நீட்டிக்கப்பட்டது.
நாம் மத்திய அரசு ஊழியர்களாக இருந்து பொதுத்துறை ஊழியர்களாக மாறியவர்கள் ஆனால் MTNL
ஊழியர்களின் நிலை வேறு அவர்கள் ஓய்வு வயது 60வயதாக உயர்த்தப்படும் முன்பிலிருந்தே பொதுத்துறை ஊழியர்களாக இருந்துவருபவர்கள் என்பது இங்கே கவனத்திற்குரியது எனக் குறிப்பிட்டார். ஊழியர்களை
முன்கூட்டியே தகுதிநீக்கம் செய்யும் FR56J விதி நமக்கு முற்றிலும் பொருந்தாது முந்தைய
சரத்துகளில் ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆகவே தொடர்ந்து இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது
என்பதை தெளிபடுத்தினார். ஆகையினால் முந்தைய விதிகளில் மாற்றம் செய்யாமல் நமது ஓய்வு
வயதை குறைக்க முடியாது என்றார்.
நிறுவனத்தின்
புத்தாக்கம் குறித்த அரசின் பரிந்துரைகள் முன்னெடுப்பதற்கான நிர்வாகத்தின் முன்மொழிவுகள்
கசிய ஆரம்பித்துள்ளன. ஆனால் இதில் ஒரு நல்லவிசயம் என்னவெனில் அரசின் நிதி உதவி இல்லாமல்
தன்னால் ஒரு இம்மியளவும் நகரமுடியாது என நிர்வாகம் அரசிற்கு தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.
தோழர்
சேது தனது உரையில் ஊழியர்களுக்கு நம்பிக்கையளித்து பேசுவது நாம் மட்டுமே. அதுவே நமது
பெரும்பலம். அத்தகைய சங்கத்தை தொழிலாளிகள் தானாக முன்வந்து வெற்றி பெறச் செய்வார்கள்
எனக் குறிப்பிட்டார்.
கூட்டத்தில்
தொலைபேசி நிலையக் கிளைச் செயலர் தோழர் பாண்டி 31.08.2019 அன்று பணி நிறைவை முன்னிட்டு
அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தோழர் பட்டாபி சால்வை அணிவித்து அவரைக் கெளரவித்தார்.
தோழர் பாண்டி மாநிலச் சங்கத்திற்கும், மாவட்டச் சங்கத்திற்கு தலா ரூ.1000/- நன்கொடையளித்தார்.
தனது
பணி ஓய்வினை தொடர்ந்து புதிய கிளை சங்க நிர்வாகிகளை தோழர் பாண்டி அறிவித்தார். பின்
தோழர் P.செல்வராஜ் தலைவராகவும் , தோழர் M.ராஜசேகர் செயலராகவும், தோழர் P.முத்துராமலிங்கம் முறையே
தலைவராகவும், செயலராகவும்,பொருளாளராகவும் ஏகமனதோடு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தின்
நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர் வெங்கடப்பன் நன்றியுரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில்
70க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் எழுச்சியோடு முழுமையாக கலந்து கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.