18 February 2023

            தலைமைப் பொதுமேலாளர் - விருதுநகர் வருகை

     நமது BSNL நிறுவனத்தின் தமிழ் மாநில தலைமைப் பொதுமேலாளர் திரு.C.V.வினோத், ITS  அவர்கள் மூன்று நாள் சுற்றுப் பயணமாக நமது மதுரை வணிகப்பகுதிக்கு நிர்வாக ஆய்வுப்பணிகள் விசயமாக வருகை புரிந்திருந்தார். அதன் அடிப்படையில் நமது விருதுநகர் மாவட்டத்திற்கு நேற்று 17.02.2023 அன்று வந்திருந்தார். காலையில் அதிகாரிகள், ஊழியர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் நமது விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள், நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைபாடுகள் குறித்து கலந்தாலோசித்தார்.

 

மதிய உணவு இடைவேளைக்குப்பின் FTTH,GSM சேவை வழங்கும் நமது முகவர்களை சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், நிர்வாகத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் குறித்து ஆலோசனை கலந்தார்.

 

நமது தலைமைப்பொது மேலாளர் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நமது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து குறிப்பிட்டு நமக்கு பெரும் நம்பிக்கையூட்டினார்.

 

அதன் பிறகு ஊழியர் சங்க, அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளை நமது தலைமைப் பொதுமேலாளர் சந்தித்தார்.

 

நமது NFTE மாவட்டச் சங்கத்தின் சார்பாக மாவட்டச் செயலாளர் தோழர் P.சம்பத்குமார், மாவட்ட தலைவர் தோழர் M.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளர் தோழர் P.சீனிவாசன்,      மாநில உதவிச் செயலாளர் தோழர் D.ரமேஷ் ஆகியோர் தலைமைப் பொதுமேலாளரைச் சந்தித்தனர். தோழர் M.ராஜேந்திரன் நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தார்.

 கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன;

 

·        சமீப காலமாக விருதுநகர் அலுவலகத்தில் மின் தூக்கி செயல்படாதது குறித்தும், அதனால் ஊழியர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து எடுத்துரைத்தோம். ஏற்கனவே காலையில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து தான் விவாதித்ததாகவும், வரும் மார்ச் மாத இறுதிக்குள் மின் தூக்கி பழுது பார்க்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என உறுதியளித்தார்.

 

·        விருதுநகர் ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தளவாட கிட்டங்கியினை மதுரைக்கு இடம் மாற்றல் செய்வது குறித்தும், அங்கு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு மனிதவளம் விணாக்கப்படுவது குறித்தும் விவாதித்தோம். தேவையற்ற தளவாடங்களை சென்னைக்கு மாற்றம் செய்ய உத்தரவு ஏற்கனவே அமுலில் இருப்பதாக கூறினார். அதுசமயம் மதுரை நிர்வாகத்தில் வெளியிருந்து வரும் தளவாடங்களை ஏற்க மறுப்பதாக துணைப்பொது மேலாளர் கூறியதை தொடர்ந்து தான் இது விசயத்தில் தொடர் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

 

·        நமது விருதுநகர் மாவட்டத்தில் ஊழியர்களுக்க வழங்கப்பட்ட அடையாள அட்டை காலவதி ஆகிவிட்டதை அடுத்து மதுரை வணிகப்பகுதி அளவில் புதிய அடையாள அட்டை வழங்க வலியுறுத்தினோம். அதற்கு ஊழியர்கள் அனைவரும் மாவட்டப் பகுதி ஊழியர்கள் எனவே மாவட்ட நிர்வாகமே ஊழியர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் பணியினை மேற்கொள்ளலாம் என தலைமைப் பொதுமேலாளர் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டினார்.

 

·        தோழியர் T.பாண்டியம்மாள், ATT அவர்கள் கொரானா  வைரஸ் தாக்கப்பட்டு 20 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நகராட்சி நிர்வாகம் வைரஸ் பாதிப்பு குறித்து சான்றிதழ் வழங்கியிருந்தது. அது செல்லாது மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய சான்றிதழ்தான் செல்லுபடியாகும் எனக் கூறி மதுரை நிர்வாகம் மறுத்தது. மேற்படி விடுமுறையை கழிக்க தோழியருக்கு விடுமுறை ஏதும் இல்லாத காரணத்தினால் 20 நாட்கள் விடுப்பிற்கான சம்பளத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்கி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சம்பளத்தில் இருந்து 4 தவணைகளாக பிடித்தம் செய்ய உத்தரவிட்டும் ஒரு மாதம் பிடித்தமும் செய்து விட்டது. இது தவறு எனச் சுட்டிக் காட்டினோம். இதனைக் கனிவுடன் கேட்டுக்கொண்ட தலைமைப் பொதுமேலாளர் அந்த கால கட்டத்தில் கொரனா விசயத்தில் நகராட்சி நிர்வாகம் தான் முழுமையாக ஈடுபட்டதாகவும், எனவே நகராட்சி நிர்வாகம் அளித்த சான்றிதழே போதுமெனவும், சம்பளம் பிடித்தம் குறித்து சென்னை சென்றதும் கவனித்துக் கொள்வதாகவும் கூறினார்.

 

·        தோழர் M.ராஜேந்திரன்,JE - தோழியர் M.ராஜேஸ்வரி,JE ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய 4 கட்ட பதவி உயர்வுக்கான உத்தரவு வெளியிடப்படாமல் இருப்பது குறித்து விவாதித்தோம். அதற்கு நமது தலைமைப் பொதுமேலாளர் ஆண்டு உயர்வுத்தொகை,         4 கட்ட பதவி உயர்வு வழங்குவது போன்ற ஊழியர்கள் சார்ந்த விசயங்களை ஒரு JTOவை நியமித்து மாவட்ட அளவில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என வழிகாட்டினார்.

 

·        தோழர் A.R.ரத்தினவேல்,AOS சிவகாசி வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். தற்சமயம்  சிவகாசி வாடிக்கையாளர் சேவை மையம் முகவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது         தோழர் A.R.ரத்தினவேல் அவர்கள் வாடிக்கையாளர் விவகாரங்களை வாடிக்கையாளர் சேவைப்பணியாளராக அன்றி அலுவலப்பணியின் வழியில் கவனித்து வருகிறார். அவரது பணி நேரம் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியராக கணக்கில் எடுக்கப்பட்டு வருகைப் பதிவுத் தளத்தில் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியராக தனது வருகையை பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர் சந்திக்கும் சிரமங்களை தலைமைப் பொதுமேலாளரிடம் எடுத்துரைத்தோம். இது குறித்து கேட்டுக் கொண்ட அவர் JTO(IT) அவர்களிடம் இது குறித்து ஆவண செய்யுமாறு கூறினார்.

 

·        விருதுநகர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் சிம் கார்டுகளை செயலாக்கம் செய்யும் பணியினை அலுவலக கம்யூட்டரில் DKYC முறையில் செயல்படுத்த முடியாத நிலை உள்ளதை சுட்டிக்காட்டினோம். இது ஒட்டு மொத்த பிரச்சினை என்பதால் சாப்ட்வேரில் மாற்றம் செய்வது குறித்து தான் கவனித்து தீர்ப்பதாக உறுதியளித்தார்.

 

·        தமிழ் நாடு காவலர்களுக்கென தனி CUG திட்டம் செயல்பாட்டில் உள்ளது அதில் காவலர்கள் தங்களையும் தங்கள் குடும்பபத்தார் உள்ளிட்டவர்கள்          8 பேரை குழுவாக இணைத்து தங்களுக்குள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். இத்திட்டத்தில் காவலர் தனது விருப்ப படி ஒருவரை நீக்கவும், சேர்க்கவும் நமது சிஸ்டம் ஏற்கவில்லை என்பதையும், இதனால் சேவை மைய ஊழியர்கள் எதிர் கொள்ளும் சிரமங்களையும் எடுத்துரைத்தோம். இது குறித்து தான் கவனித்து நடவடிக்கை எடுப்பதாக தலைமைப் பொதுமேலாளர் கூறினார்.

 

வெகு காலத்திற்கு பின் ஒரு தலைமைப் பொதுமேலாளர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்பது விருப்ப ஓய்வுத் திட்ட அமுலாக்கத்திற்கு பின்பும், 4G சேவை தர வழியின்றி விரக்தியில் இருக்கும் ஊழியர்களுக்கு பெரும் நம்பிக்கையும், ஊக்கமும் அளிப்பதாக இருந்தது. இதில் மேலும் சிறப்பம்சம் என்னவெனில் முதன் முறையாக நமது மதுரை வணிகப் பகுதி பொதுமேலாளர் விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் என்பதே.

மொத்ததில் நிறைவான சந்திப்பு என்பதில் மாற்றம் இல்லை. - வளர்க.. BSNL!