30 October 2018



ஒற்றுமை ஒருவழிப்பாதையல்ல...



2011 ம் ஆண்டு முதல் போன்மெக்கானிக் தோழர்களின் மாற்றல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை என முறையாக நமது மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் 2018ம் ஆண்டில் BSNLEU சங்கம் 2016ல் வெளியான கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் அடிப்படையில் மாற்றலுக்கான Tenure காலத்தை தனது சங்க உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மூன்று வருடங்களாக உயர்த்த வேண்டும் என பிடிவாதப்போக்குடன் செயல்பட்டு மாற்றலை நிறுத்தியது. நமது சங்கம் சார்பாக இதனை கடுமையாக எதிர்த்தோம், பல கட்டப்போராட்டங்களுக்குப் பிறகு இருசங்கங்களின் மாநிலச்செயலர்கள் கலந்து பேசி உடன்பாடு ஏற்பட்டபின்பும் BSNLEU சங்கத்தின் பிடிவாதப்போக்கினால் உடன்பாடு அமுலாகவில்லை. இதனால் Tenure காலம் முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிடுவோம் என்ற தோழர்களின் கனவு சிதைந்தது.



இந்நிலையில் தனது சங்கத்தோழர்களுக்காகவும் , சங்கத்திற்கு ஆள்பிடிக்கவும் நிறுவனத்தின் மீது தனக்கு மட்டுமே அக்கறை உள்ளது எனக் காட்டிக் கொள்ளவும் ஆளில்லாத தொலைபேசி நிலையங்களை ஒரு சார்பாக கணக்கு ( ஆவியூர் , கல்குறிச்சி , அல்லம்பட்டி) காட்டி குறுக்கு வழியில் மாற்றல் பெற BSNLEU சங்கம் பலவாறாக முயற்சித்தது.



நமது சங்கம் சார்பாக ஒவ்வொரு முறையும் தலையிட்டு BSNLEU சங்கத்தின் ஊர் ஊராக செய்த முயற்சிகளை தடுத்து நிறுத்தினோம். Tenure காலத்தை 3வருடமாக உயர்த்தவேண்டும் என பிடிவாதம் பிடித்தவர்கள் தற்போது அதை மீறிச்செயல்படுவது ஏற்புடையதல்ல என நிர்வாகத்திடம் வாதிட்டோம். டிசம்பர்’2018 வரை எத்தகைய மாற்றலுக்கும் இடமில்லை எனவும் டிசம்பர் மாதத்தில் மாற்றலை அமுல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட வேலைகளை ஆரம்பிக்கவும் ஆலோசனை கூறி கடிதம் கொடுத்துளோம்.



இந்நிலையில் BSNLEU சங்கம் திருவில்லிபுத்தூர் தோழர் சமுத்திரம் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிஸ் செய்து வருவதால் அவருக்கு மட்டும் இன்டோர் பகுதிக்கு மாற்றல் கேட்டது. நாமும் உடனடியாக நமக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை என தெரிவித்தோம். ஆனால் இதனை சாதகமாக்கி தனது சங்கத் தோழர்கள் மேலும் 3 பேருக்கு மாற்றல் பெற அச்சங்கம் முயற்ச்சிக்கிறது. நிர்வாகத்தின் நடுநிலைமையான செயல்பாட்டால் அதன் முயற்சி பலிக்கவில்லை. இந்நிலையில் மருத்துவ காரணங்களுக்கான மாற்றலைக் கூட அமுல்படுத்த மறுப்பதாக பொய்க்காரணம் கூறி நிர்வாகத்தின் மீது ஒத்துழையாமை எனும் ஆயுதத்தை பிரயோகிக்க தயாராகி விட்டது அச்சங்கம்.



நமது சங்கத்தின் ராஜபாளையம் கிளைத் தோழர் சேகர் , TT அவர்களுக்கு இறுதய அறுவைச் சிகிச்சையால் பாதிக்கப்பட்டு இன்டோர் பகுதிக்கு மாற்றல் கேட்ட போது 11/2 ஆண்டுகள் கழித்து பொதுமேலாளர் உத்தரவிட்ட பின்பும், நமது தோழர்கள் அவரது செக்சனை பார்த்துக் கொள்வதாக எழுத்து மூலமாக உறுதியளித்த பிறகே அவருக்கு மாற்றல் கிடைத்தது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம் தோழர்களே!



NFTE சங்கம் ஒருபோதும் அடுத்தவர்களை கெடுத்து தனது சங்கத்தை வளர்க்க முயற்சித்ததில்லை. தனக்கு ஒரு நியாயம் , மற்றவர்களுக்கு ஒரு நியாயம் எனச் செயல்படும் BSNLEU சங்கம் தனது பெரியண்ணன் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளவேண்டும். அதுவே ஊதிய மாற்றம் , BSNL எதிர்காலம் குறித்த கோரிக்கைகளுடன் அகில இந்திய அளவில் நடைபெறும் அனைத்து சங்கப் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும்.



தோழர்களே! சிந்திப்பீர்!



ஒன்றுபடுவோம்... போராடுவோம்...