21 June 2017


இலாபம் இல்லை என்றாலும் ஊதிய மாற்றம் சாத்தியமே!
“ Affordability an Antonym to Profitability “ 


பொதுத்துறை அதிகாரிகளுக்கான மூன்றாவது ஊதியக்குழுவை 09/06/2016ல் மத்திய அரசு அமைத்தது. விரும்பத்தக்க, சாத்தியமான, முடிந்தஅளவுக்கு என்ற ஏகப்பட்ட வரையறைகளுடன் ஏற்புடைய சம்பள விகித மாற்றங்களைத் தரவும்; அதுவும் பரிந்துரைக்கும் சம்பள உயர்வு எந்த அளவு அதிகாரிகளின் திறமையை, நிறுவனத்தின் உற்பத்தியை / இலாபத்தை அதிகரிக்கும் என்பதோடு இணைந்து பரிந்துரையை வழங்கக் குழுவுக்கு வழிகாட்டுதல் தரப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் சதீஷ் சந்திரா தலைமையிலான 3வது சம்பளக்குழு தனது அறிக்கையை 21/11/16ல் தந்தது. இருட்டில் வைக்கப்பட்ட அறிக்கை இரண்டு மாதங்களுக்குப் பிறகே 2017 ஜனவரி 27ல் வெளியிடப்பட்டது.

15 சதவிகித உயர்வு, அதுவும் லாபம் ஈட்டும் கம்பெனிகளுக்கு மட்டுமே. மேலும்,‘வரிக்கு முந்தைய லாபம்’ ( Profit Before Tax – PBT ) எனும் கம்பெனியின் நிதிநிலைமை மீது, ஊதிய உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் என்பதை இணைத்தே பரிசீலிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு. இத்தனையும் பார்த்து கம்பெனியால் ஊதிய உயர்வு வழங்க இயலும் (AFFORDABILITY) என்பதும் கம்பெனியின் முந்தைய மூன்று ஆண்டுகளின் PBT அம்சத்தோடு இணைந்தே பரிசீலிக்க வேண்டுமாம்.


சரி, முழுமையான 15 சதவீத ஊதிய உயர்வு கொடுத்து விடலாமா? இல்லை, அதுவும் PBT தொகையின் 20 சதமான மேல் எல்லைக்குட்பட்டதாக மட்டுமே இருக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு கம்பெனியின் வரிக்கு முந்தைய லாபம் 1000 கோடி என்றால், அதன் ஊழியர்களுக்கான 15 சதவீத உயர்வு என்பது ( BPT இலாபமான 1000 கோடியில் 20% ) ரூ.200/- கோடிக்கு அதிகமாக முடியாது. அதன் பொருள் யாதெனில், சம்பள உயர்வுச் செலவை அதிகமாகமல் 20 சதத்திற்கு உட்படுத்தும் போது உண்மையான சம்பள உயர்வு என்பது அறிவிக்கப்பட்ட 15 சதத்திற்கு மாறாக 10%, 5% ஏன் 0% ஆக கூட அமையலாம். சதீஷ் சந்திரா குழு தனக்குத் தரப்பட்ட வழிகாட்டல் குறிப்புகளின் எல்லையை மீறிவிட்டது. பொதுத்துறை கம்பெனியால் தர இயலக் கூடிய சம்பள உயர்வைத் தேவையில்லாமல் BPT லாபத்தோடு முழுமையாக முடிச்சு போட்டு விட்டார். அதுமட்டுமா, அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் ஊதிய மாற்றப்பிரச்சினையிலும் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து இருதரப்புப் பேச்சுவார்த்தையையே அர்த்தமற்றதாக்கிவிட்டார். இது மிகவும் துரதிருஷ்டமானது.

குழுவின் பரிந்துரை யாதெனில், ஊழியர்களின் சம்பள மாற்றம் அதிகாரிகளின் சம்பள மாற்றக் கொள்கையோடு எந்தவிதத்திலும் முரண்படக்கூடாது; எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் என்ற கால வரையறை அதிகாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைவாக இருக்கக்கூடாது. இதன் காரணமாக பல்லில்லாத, எந்த அதிகாரமும் இல்லாத சம்பள மறுநிர்ணயக்குழு ஒன்றை BSNL நிர்வாகம்26/12/2016ல் அமைத்துள்ளது. அந்தக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட எந்தச் சங்கத்தையும் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியாது, அத்தகைய அதிகாரம் ஏதும் தரப்படவில்லை. 

மேலும் DPE ( Department of Public Enterprises )இலாகாவின் தேவையான வழிகாட்டல் உத்தரவு வெளியிடப்படாததால் ஊழியர்களுக்கான குழுவானது கொள்கைக் குறிப்புகள் ( Terms of Reference ) ஏதுமின்றி செய்வதறியாது நிற்கிறது. நமது NFTE சங்கம் 8வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அடிப்படையான DPE வழிகாட்டுதல் வெளியிடப்பட பலவகையிலும் போராடுகிறது.

ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு முன்பு நட்டமடைந்த நிறுவனங்களுக்கும்கூட நாம் சாதகமான DPE வழிகாட்டல் பெற்றோம். அது 09/11/2006ல் வெளியிடப்பட்டது. இப்போதும் அத்தகைய DPE வழிகாட்டல் நமக்குத் தேவை.

அன்றைய DPE வழிகாட்டல் இவ்வாறு இருந்தது “ சம்பள மாற்றம் உத்தேசிக்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய மூன்று நிதி ஆண்டுகளில் நிகர நட்டம் அடைந்த மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் கூட தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு தரலாம். 

அத்தகைய சம்பள உயர்வால் ஏற்படும் மொத்தச் செலவிற்கு நிதியை எப்படித் திரட்டப் போகிறோம் என்ற திட்ட வரைவை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சரகம் மற்றும் நிர்வாக இலாகாவிற்கு அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்;

மேலும், நட்டமடைந்த அந்த நிறுவனங்கள் BIFR ( Board for Industrial and Financial Reconstruction) தொழில் மற்றும் நிதி மறுகட்டமைப்பு வாரியம் அல்லது BRPSE ( Board for Reconstruction of Public Sector Enterprises ) பொதுத்துறை நிறுவனங்களின் மறுகட்டமைப்பு வாரியம் முதலிய அமைப்புகளின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கக்கூடாது.

நலிவடைந்த / தொடர் நட்டத்தை சந்தித்து வரும் நிறுவனங்கள் மறுகட்டமைப்பு பரிசீலனைக்காக BRPSE போர்டுக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் அந்த நிறுவனங்களின் சம்பள மாற்றம் BRPSE போர்டின் இறுதிப்பரிந்துரைகளின் முடிவைப் பொறுத்தே அமையும்.

DPEன் 7வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் மேலே சுட்டிக்காட்டிய வழிமுறையில் நட்டமடையும் நிறுவனங்களும், வரையறைக்குட்பட்டு சம்பள உயர்வு தர முடிந்தது. ஆனால், BSNL போல நலிவடைந்த நிறுவனங்களுக்கு அத்தகைய எந்த நிவாரணத்தையும், வழிகாட்டல் நெறிமுறைகள் இருந்தும், 3வது சம்பளக்குழு பரிந்துரை அளிக்காதது துரதிருஷ்டமே.

இந்த நிலையில் BSNL நிர்வாகம் எடுத்துள்ள நிலைபாடு வரவேற்கத்தக்கது. ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வு ( சலுகைகள் படிகளில் உயர்வின்றி ) அளித்திட அரசின் நிர்வாக அமைச்சகம் மற்றும் DPEன் அனுமதியை BSNL நிர்வாகம் கோரியுள்ளது. ஏற்படக்கூடிய கூடுதல் செலவுகளுக்கான மதிப்பீடு மற்றும் எப்படி எதிர்கொள்வெதென்ற திட்ட வரையறையையும் தந்துள்ளது.

நட்டம் தொடரும், நலிவடையும் என்ற பெயரில் அல்லது லாபம் இல்லை என்ற பெயரில் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகும், BSNL அதிகாரிகளுக்கு ஊதிய மாற்றம் மறுக்கப்படும் என்றால், அது ஊழியர்களின் சம்பள மாற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையை நிச்சயம் கடுமையாகப் பாதிக்கும். எனவே அரசிடமிருந்து வரும் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள , நமது மத்திய சங்கம் தன்னால் இயன்ற அனைத்து வகைகளிலும் எல்லா சங்கங்களையும் ஒன்றிணைக்க முயன்று வருகிறது. போராட்டம் தவிர்க்க முடியாதது. நாம் மிகவும் எச்சரிக்கையாக விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம். இரண்டு லட்சம் ஊழியர்கள் அதிகாரிகளின் நலனைக் காத்திட நாம் தயாராக இருக்க வேண்டும். அனைத்து இயக்கங்களிலும் அனைவரும் முழுமையாக பங்கேற்போம்! களம் காண்போம்! வெற்றி குவிப்போம்!