12 June 2018

நமது போராட்டம் நிச்சயமாக வெல்லும்... 


டெலிகாம் டெக்னிசியன் தோழர்களின் மாற்றல் விசயத்தில் மாற்றலுக்கான டெனுயூர் காலத்தை கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் அடிப்படையில் மூன்று வருடங்களாக உயர்த்தி முன் தேதியிட்டு அமுல்படுத்த நிர்வாகம் முயற்சித்து வருகிறது . இதனை ஊழியர் விரோதச் செயல் எனக்கூறி நமது சங்கம் எதிர்க்குரல் எழுப்பியது. 

நமது ஆட்சேபனையை நிர்வாகம் ஒருதலைப்பட்சத்தோடு முற்றிலும் புறந்தள்ளியதன் விளைவாக நாம் நமது கூட்டணிச்சங்கங்களோடு இணைந்து முதல் கட்டமாக மாவட்டந்தழுவிய ஆர்ப்பாட்டத்தினையும் இரண்டாம் கட்டமாக தர்ணாப்போராட்டத்தையும் நடத்தினோம். ஆனாலும் பிரச்சினை தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது. மூன்றாம் கட்டமாக மாநிலச்சங்கத்தின் வழிகாட்டலுக்கு இணங்க பொதுமேலாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். பொதுமேலாளர் மாநில நிர்வாகத்தின் வழிகாட்டல் இன்றி தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என கைவிரித்தார். 

அதே நேரத்தில் மாநிலச்சங்கம் GM(HR) அவர்களைச் சந்தித்து பிரச்சினையில் மாநில நிர்வாகம் தலையிட்டு உடனடியாக பிரச்சினையை தீர்க்க வேண்டும் என விவாதித்தது. நமது தரப்பு நியாயத்தை கேட்டுக்கொண்ட GM(HR) தலைமைப் பொதுமேலாளர் விடுப்பில் இருப்பதால் கொள்கை விசயத்தில் தலைமைப்பொதுமேலாளர் தலையிடுவதுதான் சரியாக இருக்கும் என தான் கருதுவதால் தலைமைப்பொதுமேலாளர் மீண்டும் பணிக்கு வந்தவுடன் உங்களது பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைப்பார் என உறுதியளித்ததின் அடிப்படையில் நமது உள்ளிருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

SNEA சங்கத்தின் மாநிலமாநாட்டில் கலந்து கொள்ள தஞ்சை வந்த மாநிலச்செயலர் கடந்த 08ம் தேதி விருதுநகரில் நமது தோழர்களைச் சந்தித்தார். தோழர்கள் தந்த விபரங்களின் அடிப்படையில் சில விளக்கங்களை பெற்றுச்சென்று 11/06/2018 அன்று மீண்டும் மாநில நிர்வாகத்தைச் சந்தித்தார். விவாதத்தில் மாநிலச்செயலருடன் மாநில உதவிச்செயலர் தோழர் முரளிதரன் , மாநிலத்தலைவர் தோழர் காமராஜ், TMTCLU மாநிலச்செயலர் தோழர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். நமது மாநிலச்சங்கம் மாவட்ட நிர்வாகம் இரண்டு வருடங்கள் எனக் கூறி மாற்றலில் அனுப்பிய ஊழியர்களை மீண்டும் ஒரு வருடம் எனக்கூறி மாற்றல் வழங்காமல் இருப்பது ஊழியரகளை ஏமாற்றும் செயல் எனவும், உடனடியாக மாற்றல் வழங்காமல் காலம் தாழ்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதற்காக உண்ணாவிரதப்போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் அறிவித்தது. மாநில நிர்வாகம் நெருக்கடி ஏற்பட்டால் கார்ப்பரேட் அலுவலக உத்தரவை அமுல்படுத்துவதைத் தவிர தனக்கு வேறுவழியில்லை என தெரிவித்தது. பல்வேறு கட்ட விவாதங்களுக்குப்பிறகு பிரச்சினைக்கான தீர்வு இன்னும் நம் கையை விட்டுப்போகவில்லை எனவும் உங்களது போராட்டத்தை சற்று தள்ளி வையுங்கள எனவும் இரண்டு சங்க மாவட்டச் செயலர்களை மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்க மாவட்ட நிர்வாகத்தை பணிப்பதாகவும் தெரிவித்தது. 

இறுதியாக BSNL ஊழியர் சங்கத்தின் மாநிலச்செயலர் மற்றும் நமது மாநிலச்செயலர் இருவரும் மாற்றல் விசயத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமுக முடிவை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்துள்ளனர். நாளை 12/06/2018 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடக்கவிருப்பதால் நாளை மறுநாள் 13/06/2018 அன்று இரண்டு சங்கத்தின் மாநிலச்செயலர்களும் சந்தித்து பேசுவார்கள். 

ஆகவே தோழர்களே! மாற்றல் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம். 

நியாயம் எப்போதும் வென்றே தீரும் தோழர்களே!