20 November 2018


உற்சாகப் பெருக்குடன் நடைபெற்ற
கோவை மாநிலச் செயற்குழு...

முழுமையான புகைக்படத் தொகுப்பை காண
Gallary பக்கத்திற்கு செல்லவும்


தமிழ்மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் 19.11.2018 அன்று கோவை நகரத்தார் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. கோவை மாவட்டச் செயலர் தோழர் A.ராபர்ட்ஸ், மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் அமுதம் , மாவட்ட துணைச்செயலர் தோழர் பாலு உள்ளிட்ட தோழர்கள் செயற்குழுவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகளும் நன்றிகளும். மூன்று வேளையும் சிறப்பான உணவு ஏற்பாடு, காலையும் மாலையும் சிற்றுண்டி, தேநீர் வழங்கல் என சிறப்பான உபசரிப்பை நல்கிய கோவை மாவட்டத் தோழர்களுக்கு விருதுநகர் மாவட்டச் சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

மாநில துணைத்தலைவர் தோழர் P.சென்னகேசவன் செயற்குழுவிற்கு தலைமை தாங்கினார். திட்டமிட்ட வகையில் காலையில் சரியாக 9.30 மணிக்கு செயற்குழு துவங்கியது. செயற்குழுவின் முதல் நிகழ்ச்சியாக தேசியக்கொடியை சம்மேளனச் செயலர் தோழர் P.காமராஜ் ஏற்றி வைத்தார். சம்மேளனக் கொடியை மாநிலச் செயலர் தோழர் K.நடராஜன் ஏற்றி வைத்தார். தேசியக் கொடியேற்றத்தின் போது மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் தலைமையில் தோழர்கள் கோசமிட்டனர். சம்மேளனக்கொடியேற்றத்தின் போது கோவை மாவட்ட துணைச்செயலர் தோழர் K.பாலசுப்ரமணியன் தலைமையில் தோழர்கள் கோசமிட்டனர்.

செயற்குழுவின் முதல் நிகழ்வாக கோவை மாவட்டச் சங்கத்தின் சார்பாக மாவட்ட துணைச்செயலர் தோழர் K.பாலசுப்ரமணியன் அவர்களும் , மாநிலச் சங்கத்தின் சார்பாக மாநில துணைச் செயலர் தோழர் K.அல்லிராஜா அவர்களும் வரவேற்புரை நிகழ்த்தினர்.

மாநிலத் துணைச்செயலர் தோழர் D.ரமேஷ் அஞ்சலி உரையாற்றினார். பின் மாநிலச் செயற்குழு தோழர்கள் இயக்கத்திற்காக, சமுகத்திற்காக பாடுபட்டு மறைந்த தோழர்களுக்கு, தலைவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.



சம்மேளனச் செயலர் தோழர் P.காமராஜ் துவக்கவுரையாற்றினார். அவர் தனது உரையில் மூன்றாவது ஊதிய மாற்றத்தின் பின்னணியில் உள்ள நமது சங்கத்தின் செயல்பாடுகளை விவரித்தார். ஊதிய மாற்றத்திற்கான DPE வழிகாட்டல் வெளியீடு , பிரதமர் அலுவலகத்தை அணுகியது , அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் தேக்க நிலையற்ற ஊதிய நிலைகளை பரிந்துரைத்தது ஆகியவற்றில் நமது சங்கத்தின் தனித்தன்மையான செயல்பாட்டினை எடுத்துரைத்தார். ஊதிய மாற்றத்தில் ஒருமுகத்தன்மையை வெளிக்கொணர்வதையே நமது சங்கம் கடமையாக கொண்டு செயல்படுவதாக கூறினார். மேலும் வரும் 2019 உறுப்பினர் சரிப்பார்ப்பைச் சந்திப்பதற்கான வழிமுறைகளை, வாக்குகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் மற்றும் ஓட்டு விகிதங்கள் உள்ளிட்ட புள்ளி விபரங்களை எடுத்துரைத்தார்.

மாநிலச் செயலர் தோழர் K.நடராஜன் செயற்குழு விவாதிக்க வேண்டிய ஊதியமாற்றம் , டவர் பராமரிப்பு தனியார்மயம் , 2019 உறுப்பினர் சரிபார்ப்பு , ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் மற்றும் அமைப்பு நிலைப் பிரச்சினைகள் உள்ளிட்ட ஆய்படுபொருளை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

ஹரித்துவார் மத்திய செயற்குழு முடிவுகள் குறித்து மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் A.செம்மல் அமுதம் உரையாற்றினார்.

செயற்குழுவில் முத்தாய்ப்பாக சஞ்சார் விசிஷ்ட் விருது பெற்ற S லஷ்மண பெருமாள் நாகர்கோவில் NFTE மாவட்ட செயலாளர் ,  கலிய பெருமாள் TT  திருச்சி , M வடிவேல் OS விருதுநகர் ,  U. மகேந்திரன்  SOA(G) மதுரை ஆகிய தோழர்களுக்கு மாநிலச்சங்கத்தின் சார்பாக பதக்கமும், பொன்னாடையும் அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.

நமது மாவட்டத்தின் சார்பாக விருது பெற்ற தோழர் M வடிவேல் அவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் அவரது சார்பாக  மாவட்ட பொறுப்புச் செயலர் தோழர் P.சம்பத்குமார் அவருக்கான பாராட்டை பெற்றுக் கொண்டார்.

பின்பு மாவட்டச் செயலர்கள் ஆய்படுபொருள் மீதான தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். ஊதியமாற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தத்தின் தேவை , நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் பெற்றுத்தந்ததில் நமது சங்கத்தின் செயல்பாடு, கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள நமது தோழர்களுக்காக நிதி திரட்டுவது , நமது நிறுவனத்தின் நிதி மேம்பாட்டிற்காக USO நிதியிலிருந்து கடன் பெறுவது உள்ளிட்ட ஆக்கப் பூர்வமான கருத்துகளை தோழர்கள் எடுத்துரைத்தனர். நமது மாவட்டச் சங்கத்தின் சார்பாக மாவட்ட பொறுப்புச்செயலர் தோழர் P.சம்பத்குமார் நமது நிறுவனத்தின் நிதி வீணடிக்கப்படுவது குறித்து நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கோவை மாவட்ட முதன்மைப் பொதுமேலாளர் திரு.G.முரளீதரன்.,ITS., அவர்கள் நமது செயற்குழுவின் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையில் நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்கள் , வருவாய் பெருக்கத்திற்கான நம்முன்னுள்ள வாய்ப்புகள் , மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நமது தோழர்களின் பங்களிப்பு ஆகிய கருத்துக்களை எடுத்துரைத்தார். கோவை மாவட்ட முன்னாள் செயலர் தோழர் K.ராமகிருஷ்ணன் முதன்மைப் பொதுமேலாளரை தோழர்களுக்கு அறிமுகப்படுத்தி உறையாற்றினார்.

முன்னாள் சம்மேளனச் செயலர் தோழர் S.S.கோபாலகிருஷ்ணன் , TMTCLU ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலர் R.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் சேது வரை செயற்குழுவின் இறுதி வரை இருந்து தோழர்களை உற்சாகப்படுத்தினார்.

கோவை மாவட்டச் செயலர் தோழர் ராபர்ட்ஸ் தனது துணைவியாரின் அறுவைச் சிகிச்சையை முன்னிட்டு செயற்குழுவில் பங்கேற்க முடியாவிடினும் உணவு இடைவேளையில் கலந்து கொண்டு தோழர்களைச் சந்தித்தார்.

மாநிலச்சங்க நிர்வாகிகளில் மாநில துணைச்செயலர்கள் தோழர் G.S.முரளிதரன் – சென்னை , தோழர் பாலமுருகன்-கும்பகோணம் , மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் சுபேதார் அலிகான்-மதுரை ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

மாநிலச் செயலர் தோழர் K.நடராஜன் செயற்குழு உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துக்களைத் தொகுத்து உரையாற்றினார்.

ஒப்பந்த ஊழியர்கள் அளித்த போனஸ் நன்கொடை ரூ.5000/-ஐ சேலம் மாவட்டச்செயலர் தோழர் பாலகுமார் வழங்க TMTCLU ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலர் R.செல்வம் பெற்றுக் கொண்டார்.
கஜா புயல் நிதியாக முதல் தவணையாக ரூ.10000/- வழங்குவதாக கடலூர் , கும்பகோணம் ஆகிய மாவட்டச் செயலர்கள் செயற்குழு மேடையிலேயே அறிவித்தனர். பிற மாவட்டச் செயலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை வழங்குவதாக உறுதியளித்தனர்.

செயற்குழு நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களை மாநில துணைச்செயலர் தோழர் G.வெங்கட்ராமன் முன்மொழிந்தார்.

செயற்குழுவின் இறுதி நிகழ்ச்சியாக கோவை மாவட்ட துணைச்செயலர் தோழர் K.பாலசுப்ரமணியன்  நன்றியுரை நிகழ்த்தினார்.

செயற்குழுவில் மாவட்டச்செயலர்கள் , மாநிலச்சங்க நிர்வாகிகள் , மத்திய சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணித்தோழர்கள் என 150க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த மாவட்டச் செயலர்கள் , தோழர்கள் தங்களது சொந்த பாதிப்புகளையும் ஓரம் கட்டிவைத்து விட்டு செயற்குழுவில் பங்கெடுத்துக் கொண்டனர் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்.