கோரிக்கைகளின் நியாயங்கள்
BSNL நிறுவனத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு (AUAB கூட்டமைப்பு) 2018 டிசம்பர் 3ம் தேதி தொடங்கி ஒரு சக்தி மிக்க, பெருந்திரள் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டுள்ளது. கோரிக்கை, மக்கள் பணியாற்ற BSNL நிறுவனத்திற்கு 4-G அலைக்கற்றையை உடனே வழங்கு, தாமதமின்றி ஊதிய மாற்றத்தை அமலாக்கு, ஓய்வூதிய மாற்றத்தைச் செய், ஓய்வூதிய பங்களிப்பில் உள்ள முரண்பாடு களைந்து, ஊழியர்கள் பெறும் உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பைக் கணக்கிடு ( அதாவது, தவறான கணக்கீட்டில் நிறுவனத்திடமிருந்து வசூலித்த கோடிக்கணக்கான தொகையைத் திரும்ப வழங்கு) மற்றும் முந்தைய 2வது ஊதிய மாற்றக்குழுவின்போது தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்த்து வை என்பதே ஆகும்.
ஊதிய மாற்றம் :
ஊதிய மாற்றத்திற்கான போராட்டங்கள் மூன்று முனைகளில் தீவிரம் கொள்கின்றது. முதலாவது, ஊழியர்களும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து கூட்டமைப்பு மேடையில் ஒன்றாக வற்புறுத்துவது – சாத்தியப்படுமா என்ற சந்தேக வினா தொக்கி நிற்கும் affordability கட்டுப்பாட்டு நிபந்தனையை விலக்குவது. ஊதிய மாற்றத்தை அமலாக்குவதற்கான இந்த முன்நிபந்தனை, அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றத்தின்போது கொண்டுவரப்பட்டு புகுத்தப்பட்ட விதியாகும். இரண்டாவது முழுமையும் ஊழியர்களுக்கானது –அது, அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தைக் குழுவில் ஊதிய மாற்றத்தை அமலாக்குவதற்காக அவசியம் செய்யப்பட வேண்டிய இருதரப்பு ஒப்பந்தம்.
மூன்றாவது AITUC, CITU, INTUC, LPF முதலிய அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்க வேண்டிய ஊதிய மாற்றத்தை அமலாக்குவதற்கான affordability முன்நிபந்தனைக் கட்டுப்பாட்டு விதியை முற்றாக நீக்கி ஒழிப்பது குறித்த போராட்டம்.
தீடீர் போராட்டம் ஏன்? தீடீரென்று சங்கங்களைக் கோபமூட்டி, இந்தக் காலவரை யறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடச் செய்ததற்கான மிக முக்கிய காரணம், நவம்பர் 6-ம் தேதியிட்ட DOT-ன் கடிதம். அந்தக் கடிதம் BSNL நிறுவனத்தை இப்படி இப்படிச் செயல்படுக என்று அதிகாரமிக்கக் குரலில் அச்சுறுத்தி அறிவுறுத்திய கடிதம். அதுவும் அதற்கு நான்கு நாட்கள் முன்புதான் DOT-ன் செயலாளரை நவம்பர் 2ம் தேதி கூட்டமைப்புத் தலைவர்கள் சந்தித்துக் கோரிக்கைகள் மீது சில உத்தரவாதங்களைப் பெற்றதற்குப் பிறகு – அதற்கு நேர் மாறாக ஒரு கடிதம். விளைவு வேலைநிறுத்தம். கடிதம் சுட்டிக்காட்டிய சாராம்ச பொருள், அதிகாரிகளுக்கான ஊதியமாற்றம் பற்றித்தான் என்றாலும், கடிதம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊதிய மாற்றம் பற்றி பொதுவாகச் சேர்த்தே பேசியது.
DOTயின் ஆட்சேபம் :
அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றத்தை அமலாக்க BSNL அனுப்பிய – பல்வேறு அவதானிப்புகள் மற்றும் ஆய்வு கணிப்புகள் அடங்கிய -- வழிமுறை முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியது DOT-ன் கடிதம். அதில் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது, நிறுவனத்தின் வருவாய் குறைந்து வருவதும்; 15 சதவீத ஊதிய உயர்வு அமலாக்கத்தினால் கூடுதலாக ஏற்படக்கூடிய ஊதிய வகை செலவுத் தொகை அதிகரித்து வருவதுமே ஆகும். இரண்டாவதாக எழுப்பப்பட்ட சந்தேகம், கூடுதல் வருவாய் திரட்ட முடியும் என்ற வருவாய் வாய்ப்புக்களாக BSNL குறிப்பிட்டவை வெறும் யூகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே தவிர, உண்மையான களநிலவர அடிப்படையில் அமையவில்லை என்பதுமாகும்.
DOT மறந்தது, நாம் நினைவூட்டுவோம்:
இதில் மிக மிக துரதிருஷ்டம் யாதெனில், BSNL தனது முன்மொழிவில் குறிப்பிட்டவை அனைத்துமே, முன்பு DOT தொலைத்தொடர்பு இலாக்கா, இந்தியப் பாராளுமன்றக் குழுவிற்குச் சமர்ப்பித்த ஆவணங்களில் உள்ளவையே ஆகும். DOT தனது வார்த்தைகளையே பொருட்படுததாமல் மிக வசதியாகப் புறம் தள்ளிவிட்டது.
BSNL நிறுவனத்தின் வருவாய் குறைந்து வருவதற்கான காரணங்கள் என்று பாராளுமன்றப் பெட்டிஷன் குழுவிற்கு DOT தனது பதிலில் குறிப்பிட்டன பின்வருமாறு:
அ) தரைவழி இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்து, அலைபேசிகளாக மாற்றம் பெற்றது,
ஆ) கைபேசிப் பிரிவில் நிலவும் கடுமையான வர்த்தகப் போட்டிச் சூழ்நிலை
இ) கைபேசிப் பிரிவில் அடிக்கடி குறைத்து நிர்ணயம் செய்யப்படும் கட்டண விகிதங்கள்
ஈ) 3-ஜி அலைக்கற்றை மற்றும் ஒயர்லெஸ் வில் இணைப்பு (BWA –Broadband Wireless Access ) நிறுவுவதற்காக BSNL தனது சேமிப்பு நிதியிலிருந்து வழங்கிய ரூபாய் 18,500 கோடி கட்டணம்.
உ) இப்படி பெரும் நிதி இருப்பு மற்றும் நிகரநிலுவைத் தொகை குறைவால் அதன் மீது கிடைத்த வட்டி வருவாய் இழப்பு
ஊ) நிறுவனங்களுக்கிடையே சந்தாதாரர்களின் உபயோகத்திற்கு ஏற்ப கிடைத்து வந்த (ADC) பரிவர்த்த கட்டணம் (தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக) முன்கூட்டியே திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டது.
எ) லைசென்ஸ் கட்டணம் திரும்ப அளிக்கப்படாதது, மற்றும்
ஏ) ஏனைய மானியச் சலுகைகள் மற்றும் (கிராமப்புற சேவை அளித்தல் முதலிய சமூக பொறுப்பேற்றல் காரணமாக ஏற்படும் செலவீனங்களுக்கு வழங்கப்பட்ட) இழப்பீட்டுத் தொகைகள் திரும்பப் பெறப்பட்டது.
செலவு உயரக் காரணம் :
வருவாய் இழப்பிற்கு மேலே பட்டியலிடப்பட்ட காரணங்கள் போலவே, செலவு அதிகமானதற்கும் DOT இலாக்கா கீழ்க்கண்ட காரணங்களைப் பட்டியலிட்டது:
(i) மரபுரிமையாகப் பெறப்பட்ட ஆக அதிகமான ஊழியர் எண்ணிக்கையும் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் மற்றும் சலுகைகள் வகைச் செலவு வருவாயில் 50 சதத்திற்கும் மேல் போனது
(ii) அதே மரபுரிமையாகப் பெறப்பட்ட கம்பி மூலமான தரைவழி தொலைபேசி இணைப்புகள், தொலைபேசியகங்கள் மற்றும் அவற்றின் பராமரிப்புச் செலவு அதிகமானது
(iii) சமூகக் கடமையாக ஏற்று நடத்தி வரும் -- வர்த்தக ரீதியில் லாபம் தராத --கிராமப்புற சேவைகள்
(iv) டீஸல், பெட்ரோல் முதலிய எரிபோருள் விலை உயர்வு
(v) உயர்ந்து வரும் பராமரிப்பு மற்றும் பழுது நீக்குச் செலவுகள்
DOT யின் பாரபட்சம் :
BSNL-ன் தகவலின் படி ரூ 1.75 லட்சம் கோடி தனது ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளாக செலவு செய்துள்ளது. இந்தியச் சமூகக் கட்டமைப்பில் BSNL வகித்து வரும் முன்னுரிமை பெற்ற பிரிவு என்ற நிதிக் கமிஷன் அளித்த அந்தஸ்தும் வரையறையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது துரதிருஷ்டமே.
இச்சூழலில், பரந்து பட்ட இந்தியாவில் உள்ள அனைத்து SSA மற்றும் தொலைத் தொடர்பு வட்டங்களின் தலைமை அதிகாரிகளுக்கு 7வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதிய மாற்றம் அமலாக்கப்பட்டு விட்டது; ஆனால் அப்போது BSNL-ன் நிதி நிலைமை, நிதி ஸ்திரத்தன்மை, அதனால் ஏற்படும் விளைவு, சாத்தியப்பாடு முதலிய எது பற்றியும் DOT கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. தனது வர்க்கம் சார்ந்த ITS தலைமை அதிகாரிகளுக்கு ஊதிய மாற்றத்தை அமலாக்க DOT பச்சைக்கொடி காட்டியது.
ஊதியச் செலவு அதிகமாவதற்கு உயர்ந்து வரும் விலைவாசிப் புள்ளியே காரணம். அடிக்கடி மேற்கொள்ளப்படும் கட்டணக் குறைப்பும் நாம் அளித்து வரும் சேவையை லாபகரமாக வர்த்தகரீதியில் நடத்த முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாகும்.
4 – G பிரச்சனை :
4-ஜி சேவை அளிப்பது தொடர்பான பிரச்சனையில் முடிவெடுக்கப்டாமல் பல மாதங்களாக இழுத்தடிக்கப்படுகிறது. நாம் 20-க்கு அதிகமான தொலைத் தொடர்பு வட்டங்களில் தனியார் நிறுவனங்கள் போல 2100 மெகாஹெட்ஸ் சக்தியுடைய 4-ஜி அலைவரிசையை BSNL-க்கு வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஐடியா முதலிய தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே 4-ஜி சந்தையைக் கைப்பற்றி விட்டார்கள். கடந்த டிசம்பர் வரை மட்டுமே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 24 கோடி 4-ஜி சந்தாதாரர்களை இணைத்துள்ளனர்.
இந்தப்பின்னணியில்தான் 2100 மெகாஹெட்ஸ் அலைவரிசையைப் பெற்று BSNL 4-ஜி சேவையைத் துவக்குவது எவ்வளவு அவசரம் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். எனவேதான் 4-ஜி வழங்கு என்பது வேலைநிறுத்தக் கோரிக்கைகளில் முதன்மை பெறுகிறது.
ஓய்வூதிய மாற்றம் :
இந்தப்பிரச்சனையில் அனேகமாக அனைத்து சங்கங்களும், ஊதிய மாற்றத்தோடு பென்ஷனை மாற்றியமைக்கும் பிரச்சனை ஒன்றாக இணைக்கப்பட வேண்டாம் என கருத்தொற்றுமை கண்டுள்ளன. எனவேதான் இழுத்தடிக்கப்படாமல், தாமதமின்றி, உடனடியாக பென்ஷன் மாற்றத்தைச் செய் என்பது கோரிக்கையாக முன் வைக்கப்பட்டுள்ளது. பழைய பென்ஷன்தாரர்கள் மற்றும் எதிர்காலப் புதிய பென்ஷன்தாரர்கள் எவருக்கும் ஓய்வூதிய முரண்பாடு ஏற்படாத வகையில் இப்பிரச்சனை தீர்வு காணப்பட வேண்டும்.
துரதிருஷ்டமாக, 16-03-17 அன்று DOT வெளியிட்ட கடிதத்தில் ஓய்வூதிய நிர்ணய பார்மூலாவில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. எனவே BSNL/MTNL மற்றும் BSNL-லில் இணைந்த ஊழியர்கள் அனைவரும் அதே பார்மூலா அடிப்படையிலேயே தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவர். இதனால் பெரும்பகுதியான குறைந்த விகித ஊதியம் பெறும் துவக்கநிலை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் – அவர்கள் குறைந்தபட்ட ஓய்வூதியமான ரூ9,000/=க்கு குறைவாகவே பென்ஷன் நிர்ணயம் செய்யப்படுவார்கள்.
பென்ஷன் பங்களிப்பு பிரச்சனை :
அதுபோலவே, பென்ஷனுக்காக அளிக்கப்படும் பங்குத் தொகை பிரச்சனையும் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. நமக்கான பென்ஷன் உறுதிசெய்யப்பட்ட விதி எண் 37-ஏ பிரிவின் கீழேயே MTNL ஓய்வூதியமும் சேர்க்கப்படும் என அரசின் செய்திக் குறிப்பு (PIB) வெளியிடப்பட்டபோது, அதில் MTNL பென்ஷன் பங்களிப்புத் தொகை 2006 முதல் அவர்கள் பெறும் உண்மையான ஊதியத்தின் படியே இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு BSNL க்கு நீட்டிக்கப்படவில்லை. (நமது பங்களிப்போ ஊதிய விகிதத்தின் உச்சத்தில் கணக்கிடப்பட்டு அதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மேலதிகமாக BSNL செலுத்தி உள்ளது.) இது சரி செய்யப்படுவது என்பது நமது வருவாயோடு தொடர்புடையதாகிறது.
அதுபோலவே 2வது ஊதிய மாற்றத்தின் போது தீர்க்கப்படாது நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
மத்திய சங்க அறைகூவல் :
மேலே விவரிக்கப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டே BSNL நிறுவனத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு (AUAB கூட்டமைப்பு) 2018 டிசம்பர் 3ம் தேதி தொடங்கி ஒரு சக்தி மிக்க, பெருந்திரள் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டுள்ளது.
காற்றின் மொழி தென்றலும் இசையும் !
குழந்தையின் மொழி அழுகையும் சிரிப்பும் !
தொழிலாளர்களின் மொழி கடுமையான உழைப்பும், ஒன்றிணைந்த போராட்டமும் !
நமது மத்திய சங்கமும் அனைவரையும் அறைகூவி அழைக்கிறது,
ஓருருவாய் பேருரு கொண்டு எழுவோம் !
பெரும் பணி முன்னே ! காலவரையறையற்ற வேலைநிறுத்தம் !
உறுதியாய் பங்கேற்போம் ! வேலைநிறுத்தம் வெற்றி பெறச் செய்வோம் !
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக ! தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக ! இன்குலாப் ஜிந்தாபாத் !
- மாநிலச் சங்க இணைய தளத்திலிருந்து