28 November 2018

ஏன் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம்? 


BSNL ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரும் ஊதியமாற்றம் , அலைக்கற்றை ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்று நமது இளம் தோழர்கள் மத்தியில் நாம் வாங்கும் சம்பளமே அதிகம் , இதுவே தொடர்ந்தால் நல்லது , ஓய்வு வயதை 58 வயதாக குறைக்க வேண்டும் , ஓய்வூதியப் பலன்களுக்காக நம்மையும் நிறுவனத்தையும் சீரழிக்கிறார்கள் போன்ற தவறான வலது சாரி சித்தாந்தங்கள் விதைக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு பதில் சொல்லவே இக்கட்டுரை..



BSNL-ல் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பான ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL, 3.12.2018 முதல் ஒரு காலவரையறை வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. 

இந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய கோரிக்கைகளாக 1) 1.1.2017 முதல் ஊதிய மாற்றம் 2) BSNL-க்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு 3) 1.1.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் 4) வாங்கும் அடிப்படை சம்பளத்தின் மீது ஓய்வூதிய பங்களிப்பு மற்றும் 5) இரண்டாவது ஊதிய மாற்றத்தின் போது எழுந்த சில பிரச்னைகளின் தீர்வு ஆகியன உள்ளன.

ஊதிய மாற்றம் :

1.1.2017 அன்று பணியிலிருந்த சுமார் 195000 ஊழியர்களில் 140000 பேருக்கு இதுவே கடைசி ஊதிய மாற்றம். ஊதிய மாற்றம் செய்யப்படவில்லையெனில், இந்த 140000 பேரும் பழைய ஊதியத்திலேயே தொடர்ந்து குறைந்த ஓய்வூதிய பலன்களோடு ஓய்வு பெறுவர். BSNL-ஆல் பணி நியமனம் செய்யப்பெற்று நிறைய கனவுகளோடு நுழைந்த TTA, JTO-க்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுமையும் இதே ஊதிய நிலைகளில் தொடரும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாவர். 

DPE வழிகாட்டலின்படி BSNL -க்கு ஊதிய மாற்றம் சாத்தியமில்லை. இதிலிருந்து விலக்களிக்க அமைச்சரவைக்கே அதிகாரம் உள்ளது என DPE கூறிவிட்டது. விலக்களிக்க தேவையான அமைசச்சரவை குறிப்பை தயார் செய்து அனுப்ப DOT மறுத்துவருகிறது. தொடர் நஷ்டம் இதற்கு காரணமாக காட்டப்படுகிறது. 


JIO-வின் நியாயமற்ற போட்டி காரணமாக எங்கள் வருமானம் மிகமிக குறைந்துவிட்டது, வாங்கிய கடனுக்கு வட்டி காட்டவே அது போதுமானதாக உள்ளது என இந்தியாவின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான VODAFONE-IDEA-வின் சேர்மேன் கூறியுள்ளார், இது தான் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இன்றைய நிலை.


தொலைபேசி சேவை தரும் இந்திய தனியார் நிறுவனங்களின் இன்றைய கடன் சுமார் 7.7 லட்சம் கோடிகள். BSNL-ன் கடன் சுமார் 9௦௦௦ கோடி மட்டுமே. ஆனால் அவசர தேவைக்கு கடன் வாங்கக்கூட BSNL-க்கு பல முட்டுக்கட்டைகளை DOT போடுகிறது. TOWER துணை நிறுவனத்தை உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு BSNL-ஐ அழித்தொழிக்கும் அனைத்து வேலைகளையும் இந்த அரசும், DOT- யும் செய்து வருகிறது.


தனியார் நிறுவனங்களின் கடுமையான போட்டி, 3G அலைக்கற்றைக்காக சுமார் 18500 கோடி முதலீடு, போட்டியிட ஏதுவாக தன் கட்டமைப்பை மேம்படுத்திக்கொள்ள BSNL-ஐ அனுமதிக்காத அரசு, நக்ஸல்களால் பாதித்துள்ள பகுதிகளில் மொபைல் சேவை மற்றும் கிராமப்புற சேவை என அதிக நஷ்டமேற்படுத்திடும் சேவையை தருவது, சுமார் 2 ஆண்டுகளாக JIO நிறுவனத்தால் தனியார் கம்பெனிகளே முதன்முறையாக நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது போன்ற பல காரணங்களாலேயே BSNL-ன் நிதி நிலைமை மோசமடைந்துவிட்டது - ஊழியர்களால் அல்ல - என்பதை DOT ஏற்கவில்லை.

நஷ்டமடைய ஊழியர்கள் காரணமில்லையாதலால் அவர்களுக்கு ஊதிய மாற்றத்தை மறுப்பது நியாயம் இல்லை என்ற வாதத்தையும் DOT ஏற்கவில்லை.


உங்கள் கோரிக்கைகள் சாதகமாக பரிசீலிக்கப்படுகின்றன என்று நேரில் கூறும் DOT செயலர், உங்களுக்கு ஊதிய மாற்றம் ஒரு கேடா என்ற ரீதியில் கடிதம் மூலம் கேட்கிறார். 

போராடி ஊதிய மாற்றத்தை பெற்றாக வேண்டும் அல்லது 2007 ஊதியங்களிலேயே தொடர்ந்து STAGNATE ஆகி ஓய்வு பெற வேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாலேயே இந்த வேலை நிறுத்த அறிவிப்பினை AUAB தந்துள்ளது. 


BSNL-க்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு : 

தனியார் நுழைந்து ஆக்கிரமித்த பின்னரே BSNL-க்கு மொபைல் சேவை அனுமதி என்ற பழைய மாற்றான்தாய் மனப்பான்மை இன்னும் மாறவேயில்லை. தனியார்கள் நுழைந்து 35 கோடி 4G வாடிக்கையாளர்களை சேர்த்துவிட்ட பின்னரும், BSNL-க்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்படவில்லை. போட்டியிடவே முடியாத சூழலுக்கு BSNL-ஐ தள்ளும் இன்னொரு ஏற்பாடே இது. 2020-ல் 5G-யே வரும் என்ற நிலையில், 3G சேவையை மட்டுமே வழங்கினால், படுபாதாளம் செல்லும் நிலைக்கே BSNL ஆளாகும் என்பதாலேயே 4G அலைக்கற்றையை நாம் கோருகிறோம்.


1.1.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் : 

விதி 37-A-ன் கீழ் அரசு பென்ஷன் என்றாகிய பின் BSNL-ல் ஊதிய மாற்றத்திற்கும் பென்ஷன் மாற்றத்திற்கும் தொடர்பில்லை என்பது அனைத்து சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் நல சங்கங்களின் நிலைபாடு. எனவே 1.1.2017 முதல் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்பட வேண்டும். அது போலவே 1.1.2016 முதல் ஓய்வு பெற்றோரின் குறைந்த பட்ச ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதியம் என்பது 9000 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும். 


வாங்கும் அடிப்படை சம்பளத்தின் மீது ஓய்வூதிய பங்களிப்பு :

BSNL ஓய்வூதியர்களுக்கு விதி 37-A-ன் கீழ் அரசு பென்ஷன் வழங்கப்படுகிறது. 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அவரவர் வாங்கும் அடிப்படை ஊதியத்தின் மீதே ஓய்வூதிய பங்களிப்பு கணக்கிடப்படுகிறது. MTNL ஊழியர்களுக்கும் அப்படியே. ஆனால், BSNL மட்டும் ஊதிய விகிதத்தின் உச்சத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பை DOT-க்கு செலுத்துகிறது. சுமார் 2௦௦௦ கோடிக்கும் அதிகமான தொகையை இதுவரை BSNL-லிடமிருந்து அடாவடியாக வாங்கி விழுங்கியுள்ளது DOT. அந்த தொகையை திருப்பியளிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி அவரவரின் சம்பளத்தின் அடிப்படையிலேயே ஓய்வூதிய பங்களிப்பு வசூலிக்கப்படவேண்டும் என்பது நம் கோரிக்கை.


தோழர்களே, இந்த போராட்டம் நமக்கு மட்டுமின்றி BSNL-க்கும் ஒரு வாழ்வா சாவா போராட்டம். நமது ஊதியத்தை, ஓய்வூதியத்தை, BSNL-ஐ காக்க நாம் எடுக்கும் அஸ்திரம். பங்கேற்போம்.


அந்த ஒரு சிலருக்கு மட்டும் : 


யாரோ போராடி, யாரோ ஊதிய வெட்டிற்கு ஆளாகி, கோரிக்கைகளை நமக்கும் வென்று தருவர் என்று நினைத்து விடுப்பில் செல்லும் போராட்டம் அல்ல இது. 100 சத பங்கேற்பே கோரிக்கைகளை வென்றெடுக்கும். 


நீங்களும் பங்கேற்பீர்.


நம்மையும், வாழ்வளிக்கும் நம் நிறுவனத்தையும் காப்பீர் !