15 February 2019

யானைக்கறி வியாபாரம்...


பி.எஸ்.என்.எல். தற்பொழுது சந்திப்பது நிதி பற்றாக்குறை மட்டுமே. எல்லோரும் ஊதிப் பெருக்குவது போல, அது அழிவுப்பாதையில் செல்லவில்லை... இல்லை... இல்லை.


பின் எதற்காக இந்த விஷயம் இவ்வளவு பேசப்படுகிறது? பிறகெப்படி இவ்வளவு ஜிகினா பளபளப்புகளுக்கு மத்தியிலும் அரசுத்துறைக்கு ஆதரவு தரும் வாடிக்கையாளர்களை தனியார் பக்கம் துரத்திவிடுவது!



இப்போது இவர்கள் அழிக்க நினைப்பது பி.எஸ்.என்.எல்..யையோ ஹச்.ஏ.எல்.யையோ அல்ல, மாறாக பொது சமுதாயம் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டமைப்பு மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையத் தான் வேரோடு அறுக்கிறார்கள்.

கல்வி, மருத்துவம், சுகாதாரம் என்று ஒவ்வொன்றிற்கும் தனியார் பெருமுதலாளிகளின் காலடியில் பொதுமக்கள்  விழுந்துகிடக்க வேண்டும் என்பதன் முதல்படி தான் இது.

தொலைத்தொடர்பு துறையில், இப்போது தனியார் உட்பட எந்த நிறுவனமும் லாபத்தில் இயங்கவில்லை. தனியார் நிறுவனங்கள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் வாங்கித்தான் வண்டியை ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

பி.எஸ்.என்.எல்.க்கு மட்டுமே மிகக்குறைந்த கடன்களும், தன்னைத்தானே புத்தாக்கம் செய்து கொள்வதற்குண்டான அளவு சொத்துக்களும் உள்ளன. ஆனால் இந்நிறுவனம் குறித்த கொள்கை முடிவுகளை இதனால் தன்னிச்சையாக எடுக்க முடியாது. எல்லாவற்றையும் கேபினட் தான் முடிவு செய்யவேண்டும். சக்களத்தி பிள்ளையைக் கொஞ்சியபடி தன் பிள்ளையைத் தற்கொலைத் தூண்டும் தாயை எப்படி புரிந்துகொள்வீர்கள்!

தகுதியற்ற ஒரு சேவையை, எந்தவொரு வாடிக்கையாளரும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் இலாப நோக்கம் பாராமல், நாட்டின் ஓட்டுமொத்த வங்கி சேவைகளுக்கான இணைப்புப் பாதை, கடும் மலைப்பகுதிகள், குக்கிராமங்கள், நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் தொலைத்தொடர்பு, இயற்கைப் பேரழிவின்போதான உடனடி புணரமைப்பு என்று நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும், பந்தயத்தில் முழு உடல்த்தகுதியுடன் முதலாவதாக ஓடிக்கொண்டிருக்கும் ஒருவனை, வழியில் கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு நீ நோஞ்சான், நீ பந்தயத்தில் ஓடத்தகுதியற்றவன் என்று நடுவரே தடுத்து நிறுவதை, சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும் அனைவரும் குரூரச் சிரிப்புடன் வரவேற்பதை என்னவென்று சொல்வது?

பி.எஸ்.என்.எல் எனும் யானையைச் சாய்த்து, துண்டுதுண்டாக வெட்டிக் கூறுபோட்டு யானைக்கறி வியாபாரம் செய்யத் துடிக்கிறது அரசு ! அடிக்கடி நிகழாத அரிதானதொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியைக் காணப்போகும் கேளிக்கை மனநிலையில் கைக்கொட்டி ஆராவாரம் செய்தபடி அதனை ரசிக்கக் காத்திருக்கிறது பொதுஜனம் ! வாழ்க பாரதம் !