கிரிஷ் கர்னாட்:
ஓய்ந்தது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்,
மொழி உரிமைக்கும் ஒலித்த குரல்...
நாடக ஆசிரியர், நடிகர், இயக்குனர்,இலக்கியவாதி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்ட கிரிஷ் கர்னாட், தனது 81 வது வயதில் இன்று காலமானார். தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரமாக வலம் வந்த இவர், வில்லன் நடிகர் என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிடக் கூடியவர் அல்ல, இந்திய சினிமா உலகில் ஒரு குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்றவர்.
பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற அரசு விருதுகளையும், பிலிம் பேர் போன்ற திரைத்துறைகள் சார்ந்து பல விருதுகளும் பெற்றவர். இதிகாச, வரலாற்று கதைகளை நவீன சிக்கல்களோடு தொடர்புபடுத்தி நிறைய நாடகங்களை எழுதியவர். இந்திய இலக்கிய உலகில் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படும் ஞான பீட விருதினை பெற்ற எழுத்தாளர்.
கிரிஷ் கர்னாட், ஒற்றை தேசக் கொள்கைகளுக்கு எதிரானவர். இந்துத்துவா அமைப்புகளையும் , செயல்பாடுகளையும் தொடர்ந்து விமர்சித்து வந்தவர். இந்தியா என்பது பல வேறு பண்பாடுகளையும், பல மொழி பேசும் மக்களையும் கொண்டது, அந்த பன்முகதன்மையினையும், மொழிகளையும் இழக்க முடியாது என்ற கருத்தினை வலியுறுத்தி வந்தார். எழுத்தாளர் கல்புர்கி கொலையினை தொடர்ந்து , கருத்துரிமைக்காக தொடர்ந்து குரல் வந்தார். கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட பொழுது, இவரும் வலதுசாரி அமைப்புகளால் குறிவைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது.
வலது சாரி இந்துத்துவ அமைப்புகள், இந்துத்துவாவிற்கு எதிராக செயல்படுகின்ற எழுத்தாளர்களை குறிவைத்துள்ளதாகவும், அதில் முக்கியமாக இடம் பெற்றுள்ள நபர் கிரிஷ் கர்னாட் எனவும் செய்திகள் வெளியாயின. ஆனால், அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று கூறும் விதமாக , கௌரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்திற்கு 'Me Too Urban Naxal' என்று பொறிக்கப்பட்ட அட்டையினை கழுத்தில் அணிந்து கலந்து கொண்டார்.
அன்னாரின் மறைவிற்கு விருதுநகர் மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.