14 January 2019

பொங்கல் - வளமையின் அடையாளம்



பொங்கல் திருநாள் வளமையின் அடையாளம். அது தமிழ்நாட்டின் மண்ணோடும் மரபோடும் இணைத்துக் கொண்டாடப்படுகிற திருநாள். 

நாம் நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமாக பொங்கல் கொண்டாட்டங்கள் அமைகின்றன. நம்முடைய வாழ்வில் உழவுத்தொழில் சிறந்து விளங்குகிறது, அதைச் சார்ந்த மற்ற தொழில்களும் சிறந்து விளங்குகின்றன, நமது குடும்பங்களில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட செல்வங்கள் நிறைந்திருக்கிறன என்பதையெல்லாம் பறைசாற்றும் திருவிழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவர்கள் தங்களது உழைப்பின் பலனைக் கண்டு பெருமிதத்துடன் கொண்டாடிய விழா. ஆனால் இன்று பொங்கல் பண்டிகை தனது பாரம்பரிய பெருமையை இழந்து வெறும் கடமைக்கு கொண்டாடுகிற பண்டிகையாக மாறிவிட்டது. 

ஆளுகிற அரசுகள் உழவும் "ஏர் பின்னது உலகு" என்பதனை மறந்து முற்றிலுமாக விவாசயத்தை, விவசாயிகளை புறந்தள்ளியுள்ள கால கட்டத்தில் பொங்கல் பண்டிகை அதன் மரபார்ந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 

விளைந்த பயிர்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்று காசாக்கி காசை கண்ணால் பார்த்து உழவன் மகிழ்ந்திருந்த காலம் என ஒன்று இருந்தது. டப்பாவில் அடைக்கப்பட்ட உணவை வாங்கிச் சாப்பிடும் இன்றைய தலைமுறைக்கு விவசாயத்தின் பெருமைகள் ஒரு போதும் தெரிய வாய்ப்பில்லை. 

வஞ்சக கார்ப்பரேட் உலகம் நமது அடையாளங்களை முற்றிலுமாக அழிக்க முற்படுகிறது. அதற்கெதிராக ஏற்பட்ட எழுச்சிதான் தமிழக இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். அதன் தாக்கம் நாட்டுமாடுகளை , பாரம்பரிய கோழி மற்றும் நாய் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை நம்மிடையே ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. 

ஆகவே தோழர்களே பொங்கல் திருவிழா என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல அது நமது அடையாளம் , பெருமை என்பதை உணர்ந்து கொண்டாடுவோம். 

தோழர்கள் அனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்.