5 May 2019


சொத்து சேர்க்காவிட்டால், பிள்ளைகளின் வருங்காலம் என்ன ஆகும்? என்று கேட்காதீர்கள்.அவர்களைத்தான் அரசாங்கம் கவனித்துக் கொள்ளுமே. உங்களைப் பற்றியும் கவலை இல்லை. நீங்கள் வேலை முடித்து ஓய்வு பெற்றவுடன் அரசு உங்களைப் பார்த்துக் கொள்ளும்.சமூகத்தை இப்படித்தான் மாற்ற வேண்டும் என்றார் மார்க்ஸ். மார்க்ஸ் கனவு கண்ட இந்தச் சமூகம்தான் சோஷலிச சமூகம். 

19ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளர் மார்க்ஸ். 

பொதுவாக தத்துவஞானிகள், வரலாற்று ஆசிரியர்களாக இருப்பதில்லை, வரலாற்று ஆசிரியர்கள், சமூகவியலாளர்களாக இருப்பதில்லை. சமூகவியலாளர்கள் அனைவரும் கம்யூனிடுகளாக இருப்பதில்லை. இவர்கள் எல்லோரும் புரட்சிக்காரர்களாக இருப்பதில்லை. 

ஆனால் மார்க்ஸைப் பொருத்தவரையில் அவர் தத்துவஞானியாக இருந்தார். வரலாற்று ஆசிரியராக இருந்தார். சமூகவியலாளராக இருந்தார். அரசியல் கோட்பாட்டாளராக இருந்தார். கம்யூனிஸ்டாக இருந்தார். 

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு புரட்சிக்காரராக இருந்தார். அதனால்தான் ஒவ்வொரு துறையையும் அவர் வித்தியாசமான கோணத்தில் பார்த்தார். 

வரலாற்றை மன்னர்களின் வரலாறாக மார்க்ஸ் பார்க்கவில்லை. வர்க்கப்போராட்டங்களின் வரலாறாகவே பார்த்தார். 

மார்க்ஸ்சுக்கு முன்புவரையில் இருந்த தத்துவஞானிகள் அனைவரும், உலகம் எப்படி இருக்கிறது என்பதை விவரித்துக் கொண்டிருந்தனர். மார்க்ஸ் மட்டுமே உலகத்தை எப்படி மாற்றுவது என்ற தத்துவத்தை முன்வைத்தார். 

உலகின் சகல படைப்புகளையும் மூலதனம்தான் செய்தது என்ற சிந்தனையை உடைத்தெறிந்தார் 

மூலதனமே உழைப்பால்தான் உருவானது என்பதைக் கண்டு பிடித்து உலகிற்குச் சொன்னவர் மார்க்ஸ். முதன் முதலாக அவர் இந்த உண்மையைக் கண்டறிந்து சொன்ன போது, முதலாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பொருளாதார மேதைகள் புதிய வெளிச்சம் பெற்றனர். 

மார்க்ஸ் கூறிய கருத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்தினரிடையே ஒரு புதிய சிந்தனையை தோற்றுவித்தது. காலம் முழுக்க தன்னை மூலதனத்தின் அடிமை என நினைத்துக் கொண்டிருந்த தொழிலாளியிடம் நீதான் அந்த மூலதனத்தை உருவாக்கியவன் என்று கூறினால் எப்படி இருக்கும்-? 

நீ உருவாக்கிய மூலதனம் உன்னை அடிமை செய்கிறது என்று சொல்லும் போது தொழிலாளி வர்க்கம் எழுச்சி கொள்ளாமல் என்ன செய்யும்? 

மார்க்சின் தத்துவம் வெறுமனே மனதிற்கு தற்காலிக ஆறுதல் அளிப்பதோடு நின்று விடவில்லை. அதையும் தாண்டி சமூக மாற்றத்திற்கான வித்தாக இருந்தது. 

இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் ஒரே நம்பிக்கையாக உள்ள தத்துவம் மார்க்சியம்தான்.